சொத்து வரி உயர்வை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி பா.ஜ., வெளிநடப்பு போடி நகராட்சி கூட்டத்தில் வரி குறைக்க வலியுறுத்தல்

போடி : போடி நகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி பா.ஜ., கவுன்சிலர்கள்

நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

போடி நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி(தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் பார்கவி, பொறியாளர் குணசேகர், சுகாதார அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

மணிகண்டன், பா.ஜ., : நகரில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அவற்றை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக கூறி கண்களில் கறுப்பு துணி கட்டி கூட்டத்தை விட்டு வெளியேறினார்.இதை வலியுறுத்தி பா.ஜ., கவுன்சிலர் சித்ராதேவியும் வெளிநடப்பு செய்தார்.

பெருமாள், இ.கம்யூ., : சொத்து வரி 10 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமிஷனர் : அரசு எடுத்து முடிவு. வரி அதிக அளவு உயர்த்தவில்லை.

மணிகண்டன், ஓ.பி.எஸ். அணி : வார்டில் சுகாதாரம் மிகவும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சாக்கடை கழிவுநீர் ரயில்வே லைனில் செல்கிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

சுகாதார அலுவலர் : சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகரன், தி.மு.க., : வஞ்சி ஓடை பாலம் செல்லும் வழியில் ஸ்பீடு பிரேக் இல்லாததால் டூவீலரில் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. நிரந்தர தீர்வாக விபத்தை தடுக்க ஸ்பீடு பிரேக் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே சுரங்கப்பாதை அமைந்து உள்ள பகுதியில் எல்.இ.டி., விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி உள்ளது.

பொறியாளர் : எல்.இ.டி., விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சி பகுதியில் இயங்குகின்ற ஆடுவதை கூடத்தில் வதை செய்யப்படும் ஆடுகளின் உடல் தகுதி சரி பார்த்து சான்று வழங்க, தன்னார்வ கால்நடை டாக்டருக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.50 வீதம் ஊக்கத் தொகை வழங்குவது உட்பட 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement