கோரிப்பாளையம் பாலப்பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்

மதுரை : மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ரூ.190 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தமுக்கம் முதல் சந்திப்பு பகுதி வைகை ஆறு வரை 850 மீட்டர், அதன் மேற்கு பகுதியில் பாலம் ஸ்டேஷன் பகுதியில் 850 மீட்டர், வைகை ஆற்றின்மீது ஒரு பாலம் 450 மீட்டர் என பணிகள் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. தமுக்கம் முதல் சந்திப்பு பகுதி வரையும், செல்லுார் பிரிவு பகுதிக்கும் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளது. செல்லுார் பகுதியில் மேல்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றுக்குள் 15 ஸ்பான்களை (மேல்தளம்) தாங்கும் வகையில் 14 துாண்கள் அமைக்க வேலை நடந்து வருகிறது. இப்பணிகள் துவங்கிய நிலையில், கடந்த மாதம் மழையால் ஆற்றில் தண்ணீர் வந்ததால் தாமதமானது. தண்ணீர் வற்றிய நிலையில் சில வாரங்களாக பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள ஏ.வி. பாலத்திற்கு இணையாக மேற்கு பகுதியில் கூடுதல் பாலமாக இது அமைக்கப்படுகிறது.

இப்பாலப் பணியில் ஆற்றின் தென்பகுதியில் இருந்த கட்டடங்கள், வீடுகளை அகற்றுவதில் இருந்த பிரச்னைக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டது. தற்போது கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஆற்றைக் கடந்து ரோடு தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் கூறுகையில், ''இப்பாலப் பணிகள் தற்போது விரைவு படுத்தப்பட்டுள்ளன. வரும் டிசம்பருக்குள் முடிக்க திட்டம் உள்ளது. அதற்கேற்ப பணி நடக்கிறது'' என்றனர்.

Advertisement