அழகர்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

அழகர்கோவில் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அழகர்கோவில் கள்ளழகர் கோயில், அதன் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்களில் பக்தர்களின் 'நாராயணா' கோஷத்துடன் சொக்கவாசல் திறக்கப்பட்டது.

கள்ளழகர் கோயிலில் இந்தாண்டு திருஅத்யயன உற்ஸவம் டிச. 31ல் துவங்கியது. நேற்று 11ம் நாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5:45 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் பக்தர்களின் 'நாராயணா' கோஷத்துடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். எதிரே நம்மாழ்வார் பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. பின் சயன மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாள்விசேஷ பூஜை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.

இதன் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் அதிகாலை 5:45 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், இணை கமிஷனர் செல்லத்துரை, அறங்காவலர் குழுவினர், பணியாளர்கள் செய்தனர்.

புதிய 'கேட்' ஏற்பாடு



கள்ளழகர் கோயில் இரணியன் கோட்டை வாசலில் புதிதாக இரும்பு 'கேட்' அமைக்கப்படுகிறது. முன்பு இதில் தடுப்புத் துாண்கள் மட்டுமே இருந்தன. பாதுகாப்பு கருதி, இரவில் யாரும் வளாகத்தில் தங்காத வகையில், இரும்பு கேட் அமைக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் அவ்வழியே செல்ல தற்காலிகமாக அனுமதிக்கப்படவில்லை. 'ஓரிரு நாட்களில் கேட் திறக்கப்படும்' என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

சோழவந்தான்



* ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதற்காக ஆழ்வார்கள் திருப்பாசுரங்களுடன் வரவேற்க, பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காலை 5:33 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருளினார். பஜனைக் குழுவினரின் பாடல்களுடன் சுவாமி கோயிலை சுற்றி வீதிகளில் வலம் வந்தார். சிறப்பு பூஜைகளை பட்டர் பார்த்தசாரதி செய்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுதா, கணக்கர் முரளிதரன், அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம் செய்திருந்தனர்.

* குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் 2 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று துவங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின் 5:30 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக சுவாமி எழுந்தருளினார். ராஜ அலங்காரத்தில் கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி கோயிலில் இருந்து புறப்பாடாகி பக்தர்கள் புடைசூழ கோவிந்தா கோஷத்துடன் குருவித்துறை கிராம வீதிகளில் வலம் வந்தார்.

கன்னியப்ப முதலியார் மண்டகப்படியில் சுவாமிக்கு பால், தயிர் இளநீர் உள்ளிட்ட அபிஷேக திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று (ஜன.11) காலை 7:35 மணிக்கு மேல் சுவாமி குதிரை வாகனத்தில் கோயில் புறப்பாடு நடக்கிறது.

Advertisement