18ம் கால்வாயில் மது பாட்டில் வீசுபவர்களுக்கு எச்சரிக்கை - கண்மாய்கள் நிரம்புவதில் சிக்கல்

கூடலுார் : 18ம் கால்வாயில் மதுபாட்டில்கள் கழிவுப்பொருட்களை வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ம் கால்வாயில் பாசனத்திற்காக 2024 டிச.21ல் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 47 கி.மீ., தூர கால்வாய் மூலம் 4615 ஏக்கர் நேரடி பாசனம் நடைபெறுகிறது. மேலும் 55 கண்மாய்கள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மானாவாரி சாகுபடி நிலங்கள் பயன்பெறும். தண்ணீர் திறந்து விடப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கடைமடை வரை தண்ணீர் சென்றடையவில்லை. ஆக்கிரமிப்ப,கரைகளில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மேலும் கால்வாயில் கழிவுகள், மது பாட்டில்கள் கொட்டப்படுகிறது. இவை குறுக்குப் பாலங்களில் சிக்கி தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது டி.ரங்கநாதபுரத்தில் உள்ள சின்ன தேவிகுளம், புதுப்பட்டி இடையக்குளம், அனுமந்தன்பட்டி வள்ளியம்மன்குளம் ஆகிய 3 கண்மாய்களுக்கு மட்டும் கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற 52 கண்மாய்களுக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. பெரியாறு அணை நீர்மட்டமும் குறைந்து வருகிறது.


இதனால் கூடுதல் நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் கண்மாய்கள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால்வாயில் தண்ணீர் வெளியேற முடியாமல் தடுக்கும் குப்பை, மது பாட்டில்கள், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement