உரிய நேரத்திற்கு டாக்டர்கள் வராததால் நோயாளிகள் தவிப்பு; மாவட்ட மருத்துவமனையில் தலைவிரித்தாடும் வசூல்
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவிற்கு டாக்டர்கள் உரிய நேரத்திற்கு வராததால் கூட்டம் அதிகரித்து நோயாளிகள் சிகிச்சை பெற தவிக்கின்றனர். பிரசவ வார்டில் தலைவிரித்தாடும் வசூல் வேட்டையால் மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தாலுகா பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், 200 க்கும் அதிகமான உள்நோயாளிகள் 24 மணிநேரமும் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு பொது மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு, பிரசவம் என 35 பிரிவுகள் உள்ளது. இங்கு 40 டாக்டர்கள் பணியில் இருந்தனர். 2015ல் தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்பு வெளிநோயாளிகள் பிரிவு காலை 7:30 மணிக்கு துவங்கும். அதற்கு முன்பாக டாக்டர்கள் 7:15 மணிக்கு மருத்துவமனைக்குள் வந்துவிடுவர். தற்போது பல டாக்டர்கள் காலை 8:30 மணிக்கு வருகின்றனர். இதனால் ஓ.பி., பிரிவில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுகின்றனர். தள்ளு,முள்ளு செய்து டாக்டரை சந்திக்க வேண்டியுள்ளது.
இரவு பணியில் டாக்டர்கள் இல்லை
இரவில் பணிக்கு வரும் டாக்டர்கள் பணி நேரத்தில் மருத்துவமனைக்குள் காண்பது அரிதாக உள்ளது. வார்டில் பணியாற்றும் நர்ஸ்களிடம் டூயூட்டி டாக்டர் பற்றி கேட்டால் 'ரவுண்ட்ஸ்' சில் உள்ளார் என்ற ஒருவரி பதில் இரவு முழுவதும் கூறுகின்றனர். இதனை மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்டு கொள்வதில்லை. இணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள மருத்துவமனையிலேயே இந்த அவலம் தொடர்கிறது.
பிரசவவார்டில் சுகப்பிரசவம் நடந்தால் ஆண் குழந்தைக்கு ரூ.2 ஆயிரம், ஆப்பரேஷன் என்றால் ரூ.4 ஆயிரம், பெண் குழந்தை என்றால் இதில் பாதி தொகை சில நர்ஸ்கள் கட்டாயப்படுத்தி பெறுகின்றனர்.
இங்கு தற்போது 10 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் லேசான பாதிப்பாக இருந்தாலும் நோயாளிகளை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதிலே குறிக்கோளாக செயல்படுகின்றனர். இதனால் நோயாளிகளை சிரமத்திற்குள்ளாக்குகிறது.மருத்துவ இணை இயக்குனர், கண்காணிப்பாளர், நிலைய அலுவலர் வார்டுகளுக்கு ரவுண்ட்ஸ் சென்று நோயாளிகள் குறைகளை கேட்டு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிப்பாளர் குமார், 'டாக்டர்கள் காலி பணியிடம் நிரப்பக்கோரி மருத்துவ இயக்குனரகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம். பணம் வசூல் செய்யும் நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.--