l அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மூடல் l கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் தொடர் அலட்சியம்
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2015 திறக்கப்பட்ட அம்மா உணவகம் ஆட்சிமாற்றம் காரணமாக பராமரிக்கப்படாமல் பெயரளவில் இயங்குகின்றன.
இங்கு மிகக்குறைந்த விலையில் உணவு விற்பனை செய்வதால் ஏழை உள் நோயாளிகளின் குடும்பத்தினர், கூலித்தொழிலாளர்கள், பயணிகள், பொதுமக்கள் பலர் உணவு சாப்பிட வருகின்றனர்.
இந்நிலையில் ஜன.1 காலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவக கட்டடத்தில் கூரை பெயர்ந்து விழுந்தது.
அதன் பிறகு 10 நாட்களாக திறக்கப்படாமல் பூட்டப்பட்டுஉள்ளது. இதனால் நோயாளிகள், அவர்களுடன் தங்கியுள்ளவர்கள், வெளியூர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டதால் தி.மு.க., பிரதிநிதிகள், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
ஏழை மக்கள், தொழிலாளர்கள் பயன்பெறும்அம்மா உணவகம் கட்டடத்தை விரைவில் சீரமைத்து மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் கார்மேகம் கூறுகையில், மருத்துவமனை அம்மா உணவகம் கட்டடம் மிகவும் சேதமடைந்துஉள்ளது. அங்கு பணிபுரிய பணியாளர்கள் அச்சப்படுவதால் பூட்டப்பட்டுள்ளது. அதற்கு பதில் பழைய சி.எஸ்.எஸ்.டி., மருத்துவப் பொருட்களை வைத்திருந்த கட்டடத்தை தருவதாக கூறியுள்ளனர்.
அவ்விடத்தில் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.