அடுக்குமாடி குடியிருப்பில் தேனீக்கள் பொதுமக்கள் பலர் பாதிப்பு
பல்லடம், : பல்லடம், அறிவொளி நகரில், வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இக்குடியிருப்பின் ஒரு பகுதியில், தேனீக்கள்கூடு கட்டி உள்ளன.
நேற்று மதியம், கூட்டில் இருந்து கலைந்த தேனீக்கள், அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்தன. தேனீக்கள் கடித்ததில், பொதுமக்கள் பலர் பாதிப்புக்குள்ளாகினர்.
குடியிருப்பினர் கூறுகையில், 'அடுக்குமாடி குடியிருப்பின் 9ஆவது பிளாக்கில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால், அதிகாரிகள் எந்த வகை நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று மதியம், கூட்டில் இருந்து கலைந்த தேனீக்கள், இங்குள்ளவர்களை சுற்றி வளைத்து கடிக்க துவங்கின. இதில், குமார், அல்லா பிச்சை, பாய், கண்ணன் முருகன், ராஜசேகர் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில், ஆபத்தான இந்த தேனீக்களை உடனடியாக இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.
முன்னதாக, குடியிருப்புகளை சூழ்ந்த தேனீக்களில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் வீடுகளின் கதவு, ஜன்னல்களை மூடினர். இங்குள்ள கடைகள் மூடப்பட்டன. தேனீக்களை விரட்ட, பொதுமக்கள் புகை மூட்டினர். அதிகப்படியான தேனீக்கள் விரட்டிக் கடித்ததில், மூன்று பேர் அதிக விஷம் பாய்ந்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அனைவரும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பயன்படாத அவசர எண்கள்
பொதுமக்கள் கூறுகையில், 'தேனீக்கள் தாக்க துவங்கியதும், அவசர உதவி கருதி உடனடியாக, 100 மற்றும் 101க்கு தொடர்பு கொண்டோம். இருப்பினும், போலீசார் யாரும் வரவில்லை. தீயணைப்புத் துறைக்கு இரண்டு மூன்று முறை தொடர்பு கொண்டு எந்தப் பயனும் இல்லை. இதனால், 108க்கு அழைத்து, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவசர உதவி எண்கள், அவசர காலத்துக்கு பயன்படாமல் உள்ளன,' என்றனர்.