நேரடி தொடர்பு ஏற்படுத்தும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' 'சைமா' கருத்தரங்கில் 'அட்வைஸ்'
திருப்பூர் : 'டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக மட்டுமே, நுகர்வோரை நேரடியாக சென்று சேர முடியும்' என, பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.
'சைமா' சார்பில் 'பிஸினஸ் பேசலாம் வாங்க' என்ற தலைப்பில், நான்காவது நிகழ்ச்சி, நேற்று மாலை, சைமா அரங்கில் நடந்தது. சைமா தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் பாலசந்தர், பயிலரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார். லயன்ஸ் செயலாளர் பழனிசாமி பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'சாட்மி' டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன நிறுவனர் சங்கீதா அபிேஷக் பேசுகையில், ''உற்பத்தியாளர்கள், தங்களது தயாரிப்பு பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் மார்க்கெட்டிங் யுக்தியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு, சமூக வலைதளங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக மட்டுமே, நுகர்வோரை நேரடியாக சென்றடைய முடியும்,'' என்றார். நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சங்க பொருளாளர் சுரேஷ், நன்றி கூறினார்.