இலவச வேட்டி, சேலை வினியோகத்தில் குளறுபடி
திருப்பூர் : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேட்டி சேலை கடைகளுக்கு வந்து சேராமல் உள்ளது.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்த வரை, 7,99,180 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், வேட்டி, சேலையும் வழங்கப்பட வேண்டும். இதில், வேட்டி சேலை வழங்க தகுதியான கார்டுகள் எனக் கண்டறிந்து 7,85,741 கார்டுகளுக்கு இந்த இலவச வேட்டி சேலை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், திருப்பூர் மாவட்டத்துக்கு, 6,49,737 வேட்டி மற்றும் 6,48,596 சேலை மட்டுமே வந்து சேர்ந்துள்ளது.
இதனால், கடைகளுக்கு தேவைக்கேற்ப பிரித்து அனுப்பி வைத்துள்ளனர். பெரும்பாலான கடைகளில், 50 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. வேட்டி மட்டும் கொடுத்து விட்டு சேலையை பின்னர் வாங்கி கொள்ளுமாறு கூறினால், எங்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். பதில் சொல்லி சமாளிப் பதற்கு நாங்கள் தான் அவதிப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து தகுதியான கார்டுதாரர்களுக்கும் முழுமையாக இவை வழங்கப்படும். வேட்டி சேலையைப் பொறுத்தவரை வந்து சேர்ந்த எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கலாம். இருப்பினும் இம்மாத இறுதிக்குள் முழுமையாக தருவித்து பயனாளிகளுக்கு வழங்கப்படும்,' என்றனர்.