மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
திருவாதிரை உற்சவ விழா
கொங்கு தேசத்தின் மேற்கு திசையில், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகை சிறப்புகளை கொண்டுள்ள, பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. காலை முதல் மாலை வரை திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது.
விஸ்வரூப தரிசனம்
குனியமுத்துார், நரசிம்ம புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், அதிகாலை 4:15 மணி முதல் முதல் காலை 6:45 மணி வரை, திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்துடன், துவாதசி புறப்பாடு, கூடாரவல்லி விழா நடக்கிறது.
குதிரை வாகன காட்சி
மேற்றலைத் தஞ்சாவூர் என அழைக்கப்படும், அன்னுார் அருள்மிகு ஸ்ரீ அருந்தவச்செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரஸ்வாமி திருத்தலத்தில், 25ம் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டு திருத்தேர் திருவிழாவில், மாலை 7:00 மணிக்கு குதிரை வாகன காட்சி உற்சவம் நடக்கிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்க, அழைப்பு விடப்பட்டுள்ளது.
விளையாட்டு விழா
போத்தனுார் செட்டிபாளையத்தில் உள்ள, அவதார் பப்ளிக் பள்ளியில், 13வது ஆண்டு விளையாட்டு விழா, காலை 8:15 மணி முதல் நடக்கிறது. ஒலிம்பியன்' ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
திருக்குறள் பயிலரங்கம்
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில் வன்மையுள் எல்லாம் தலை' பயிலரங்கம், பூ மார்க்கெட், தேவாங்கப் பேட்டை தெரு 1ல் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
பொங்கலும் பொங்குது
கிணத்துக்கடவு, அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலை 9:30 மணி முதல், தைத் திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டம் நடக்கிறது. பொங்கல் வைத்தல், மாணவர்களின் கலை விழாக்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் என, களைகட்டப் போகிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் பாரத் பெட்ரோல் பங்க் அருகில், பேரூர் பிரதான சாலையில் உள்ள ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில், இரவு 7:00 மணி முதல் 8:30 வரை, குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
இசை விழா துவக்கம்
பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, ஐந்து நாட்கள் இசை விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, மாலை 5:15 மணிக்கு, அஜ்ஜனுார் பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின், பஜன் இசை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
திருமந்திர உரை
கோவை மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகர், எப் 5, ஐந்தாவது வீதி, ஆத்வைத வேதாந்த குருகுலம் ஆத்ம வித்யாலயத்தில், மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை வாராந்திர நிகழ்வு நடக்கிறது. திருமந்திர உரை குறித்து, சுவாமி சங்கரானந்தா அருளுரை வழங்குகிறார்.
வைரவிழா கொண்டாட்டம்
அர்ப்பணிப்பு மிக்க கல்வி சேவையில், 60 ஆண்டு பாரம்பரியமாக, கார்மல் கார்டன் பள்ளியின் வைரவிழா கொண்டாட்டம் மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. சிறப்பு விருந்தினராக, கோயமுத்துார் பேராயர் மற்றும் பள்ளியின் தலைவர் தாமஸ் அக்வினாஸ், கவுரவ விருந்தினராக, முதன்மை குரு ஜான் ஜோசப், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
பட்டமளிப்பு விழா
கோவை அரசு கலைக்கல்லுாரியின் 33வது பட்டமளிப்பு விழா, காலை 10:00 மணிக்கு, கல்லுாரியின் திறந்தவெளி அரங்கில் நடக்கிறது. கல்லுாரி கல்வி இயக்குனர் (ஓய்வு) குமாரசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டம் வழங்க உள்ளார். தலையில் கிரீடம் சூட்டிக் கொள்ளும் மாணவர்களுக்கும், அதை காணும் பெற்றோருக்கும் தனி மகிழ்ச்சி தான்.
பொங்கல் விழா
யுனைடெட் கல்வி நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி கோயம்புத்துார் எலைட் இணைந்து நடந்தும் பொங்கல் விழா, கல்லுாரி வளாகத்தில் காலை 9:30 மணி முதல் நடக்கிறது. கோலப்போட்டி, வள்ளி கும்மி ஆட்டம், லக்கி கார்னர், உறியடித்தல் என போட்டிகளில் மாணவ, மாணவியர் கலக்க காத்திருக்கின்றனர்.
பொங்கலோ பொங்கல்
ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், காலை 11:00 மணியளவில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் செல்வி, சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
களை கட்டும் பொங்கல்
அவிநாசி ரோடு, அரசூரில் உள்ள கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், காலை 9:00 மணி முதல் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், கரகாட்டம், கயிறு இழுத்தல், கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பொங்கும் உற்சாகம்
காரமடையில் உள்ள, டாக்டர்.ஆர்.வி.கலை, அறிவியல் கல்லுாரியில் பொங்கல் திருவிழா, காலை 10:30 மணி முதல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைத்தல் முதல் பாரம்பரியமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் என, மாணவ, மாணவியர் அசத்த தயாராக உள்ளனர்.