திருமணம் செய்ய சொல்லி டார்ச்சர்; பெண்ணை கொன்று 8 மாதங்களாக உடலை பிரிட்ஜில் வைத்த கொடூரன் கைது

9


போபால்: மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய பெண்ணை கொலை செய்து 8 மாதங்களாக பிரிட்ஜில் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


தேவாஸ் பகுதியில் சஞ்சய் பட்டிதர் என்பவர் ஏற்கனவே திருமணமான நிலையில், பிங்கி பிரஜாபதி,30, என்ற பெண்ணுடனும் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். பிங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, சஞ்சய் பட்டிதரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.


இதனால், கோபமடைந்த அவர் பிங்கியை கொலை செய்து, வீட்டில் உள்ள பிரிட்ஜில் உடலை வைத்துள்ளார். சுமார் 8 மாதங்களாக உடல் பிரிட்ஜில் இருந்ததால், தூர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில், பட்டிதரின் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது, பிரிட்ஜை திறந்து பார்த்த போது, உள்ளே அழுகிய நிலையில் சேலை அணிந்திருந்த பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருமண கோலத்தில் இருந்த அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இது குறித்து போலீசார் கூறுகையில், "கடந்த ஜூன் மாதமே பிங்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை பிரிட்ஜில் வைத்ததால் வெளியே தெரியாமல் இருந்து வந்தது. அவரது குடியிருப்புக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், உடல் அழுகி தூர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது", என்று கூறினர்.

இதேபோல, கடந்த 2022ம் ஆண்டு டில்லியில் ஸ்ரதா வாகர் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement