சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட நிறுவனம் மாசுகட்டுப்பாடு அதிகாரிகளிடம் சிக்கியது
திருப்பூர், : திருப்பூரில், ஆங்காங்கே வாடகை கட்டடங்களில் அனுமதி பெறாத பட்டன், ஜிப் சாயமேற்றும் நிறுவனங்கள் இயங்குகின்றன.
இந்நிறுவனங்கள், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை, ரகசியமாக அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் அருகிலுள்ள சாக்கடை கால்வாய்களில் திறந்து விடுகின்றன.
திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளிலிருந்து வரும் சாக்கடை கழிவுநீர், பி.என்., ரோடு லட்சுமி பகுதியில் ஒருங்கிணைந்து, மந்திரி வாய்க்கால் என்கிற பெயருடன், ஊத்துக்குளி ரோடு, வாலிபாளையம், சடையப்பன் கோவில் ரோடு, யூனியன் மில் ரோட்டை கடந்து, நொய்யலாற்றில் கலக்கிறது.
நேற்றுமுன்தினம் மாலை, சடையப்பன் கோவில், துவாரகாமயி கோவில் அருகே, மந்திரி வாய்க்காலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி, நொய்யலாற்றில் கலந்தது.
இதுகுறித்து, நேற்றைய 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா, உதவி பொறியாளர் கதிர்வேல் உள்பட அதிகாரிகள் குழுவினர், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
மூன்று மணி நேர ஆய்வில், சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட லட்சுமி நகர், 3வது வீதி, பிரிட்ஜ் வே காலனியில், ஒரு கட்டடத்தின் முதல்தளத்தில் விக்டோரியா கலர்ஸ் என்கிற பெயரில், அனுமதி பெறாமல் பட்டன், ஜிப், லைஸ் சாயமேற்றும் நிறுவனம் நடத்திவந்ததும்; சாயக்கழிவுநீரை, சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் தெரிய வந்துள்ளது.
மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார் கூறுகையில், ''மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அதிகாரிகள் குழுவினர், லட்சுமி நகரில் நடத்திய ஆய்வில், அனுமதி பெறாமல் இயங்கிய பட்டன், ஜிப் டையிங் நிறுவனம் பிடிபட்டுள்ளது.
கலெக்டருக்கு பரிந்துரைத்து, அந்நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டிக்கவும், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.