சுவரில் வெடிப்பு ஏற்பட இதுவும் காரணம்!
கட்டுமான துறையில் நவீன தொழில்நுட்பங்களின் வருகையானது, பணிகளை எளிமையாக்கி வருகிறது. பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு, சுற்றுச்சூழலின் பாதுகாப்பு கருதி, மாற்று பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
'ரெடிமேட் கான்கிரீட்' சுவர்கள், இரும்பு பிரேம்கள் கொண்டு கட்டுமானம் என, நவீனங்களின் தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதே சமயம், பாரம்பரிய முறையிலான கட்டுமானங்களை மட்டுமே விரும்புபவர்களும் உண்டு. இப்படி பல லட்சம் ரூபாய் செலவில் வங்கி கடன், ஆவணங்கள் அடமானம் என, பல்வேறு வழிகளில் பார்த்து, பார்த்து கட்டும் வீடுகளில் தரமான பொருட்கள் மட்டுமின்றி, காலநிலைக்கு ஏற்ப கட்டுமான பணிகளை மேற்கொள்வதும் அவசியம்; இல்லையேல், கட்டட உறுதியில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
வீட்டின் முக்கிய கட்டுமான, ரூப் சிலாப் போடப்பட்ட சிறிது நேரத்தில் சில இடங்களில் வெடிப்புகள் வருவதாக, கட்டட உரிமையாளர்கள் புலம்புவதுண்டு. நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் இதற்கு தீர்வு கிடைத்தாலும், காலநிலை மாற்றத்தால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதாக, பொறியாளர்கள் எச்சரிக்கின்றனர். கட்டட பொறியாளர்கள் கூறுகையில், 'வெப்பமான வானிலை மற்றும் வறண்ட காற்று, பலகை அடைப்பு தரம், மோசமான வேலைப்பாடு மற்றும் நீர்-, சிமென்ட் விகிதத்தால் விரைவான ஈரப்பதம் இழப்பு ஏற்பட்டால், ரூப் சிலாப்பில் கான்கிரீட் விரிசல் ஏற்படுகிறது.
இக்காரணிகளை உடனடியாக சரி செய்வது மற்றும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, கான்கிரீட் மேற்பரப்பில் சிமென்ட் கலந்த நீரை தெளித்தும், அதை சமன் செய்யலாம். தவிர, இலகு ரசாயன கலவைகளை சரியான விகிதத்தில், பயன்படுத்துவதன் வாயிலாக, விரிசல்கள் உருவாவதை முற்றிலும் தவிர்க்கலாம்' என்றனர்.