கோவையில் களைகட்டிய பொங்கலோ பொங்கல்!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சமுதாய கருத்தை மையப்படுத்தி, ஒவ்வொரு துறை ஊழியர்களும் இணைந்து கோலம் வரைந்தனர். ஊழியர்களுக்குள் சிறுதானிய சமையல் போட்டி நடத்தப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியர் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றனர். பழங்கால உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.
பள்ளி மாணவ - மாணவியரின் கலைநிகழ்ச்சி, பார்வையாளர்களை ஈர்த்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் இணைந்து சிலம்பம் சுழற்றினர். கலை நிகழ்ச்சிகளிலும் கலக்கினர். மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இது போல், கலெக்டர் அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லுாரிகளில் பொங்கல் விழா
கோவை பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
* சரவணம்பட்டி சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்கள், பேராசிரியர்கள் சேலை, வேட்டி சேலை என பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். வளாகம் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
செயலாளர் ராமச்சந்திரன், பொங்கல் விழா கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ரங்கோலி, கயிறு இழுத்தல், உறியடி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கரகாட்டம், வள்ளிகும்மி மற்றும் நாட்டுப்புற பாடல், நடனம் நடந்தன. செயலாளர் சந்தியா, துணைச் இணைச் செயலாளர் நித்யா மற்றும் நிர்வாகிகள், முதல்வர் ராதிகா, பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
* கண்ணம்பாளையம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன் தலைமை வகித்தனர். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கண்ணம்பாளையம் பேரூராட்சித்தலைவர் புஷ்பலதா, பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் செல்வராஜ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவின் முத்தாய்ப்பாக, சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.