பொங்கல் பண்டிகை வந்தது... மகிழ்ச்சியை அள்ளித் தந்தது!

தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் பண்டிகை, வரும், 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், நேற்றே திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள பள்ளி, கல்லுாரி, பொது அமைப்பின் சார்பில், பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது.

குமரன் மகளிர் கல்லுாரி



திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லுாரி மைதானத்தில், மாணவியர், 80க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்தனர். பொது பொங்கல் வைக்கப்பட்டு, சூரிய வழிபாடு நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு, மாணவியர் பாரம்பரிய உடையான சேலைகளில் வந்து அசத்தியிருந்தனர்.

உறியடித்தல், கும்மியாட்டம், ஒயிலாட்டம், நாட்டிய நடன நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கல்லுாரி தாளாளர் அர்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், பி.ஆர்.ஓ., தமிழ்செல்வி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். பேரவை பொறுப்பாளர் பொன்மலர், கல்லுாரி மாணவியர் பேரவை தலைவி ராகவர்த்தினி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

நிப்ட்-டீ கல்லுாரி



திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள, 'நிப்ட்-டீ' கல்லுாரியில், ஆண்டுதோறும் பொங்கல் விழா, பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது. நேற்று, தைப்பொங்கல் விழாவை, மாணவ, மாணவியர் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு பண்டிகைகளை குறிப்பிடும் வகையில் கோலமிட்டு, மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.

இயற்கை சூழலுக்கு நன்றி கூறும் வழிபாட்டை தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன. மாணவ, மாணவியர் கயிறு இழுக்கும் போட்டியில், உற்சாகத்துடன் பங்கேற்றனர். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான பாடல்களுக்கு குழு நடனமாடினர்; உறிஅடிக்கும் போட்டி; வேட்டி மற்றும் சட்டை - சேலைகள் அணிந்த 'பேஷன் - ேஷா' நடந்தது.

மாஸ்கோ நகர் துவக்கப்பள்ளி



திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பொங்கல் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வடிவு தலைமை வகித்தார். கவுன்சிலர் சேகர் பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிலம்பம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மாதிரி வாடிவாசல் அமைக்கப்பட்டு, காளை முகமூடி அணிந்து, மாணவர்கள் ஜல்லிக்கட்டி போட்டி நடத்தினர். மாணவியர் பங்கேற்ற கோலப்போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது.

சிலம்பகவுண்டன்வலசு பள்ளி



வெள்ளகோவில் அருகே சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் மற்றும் தை திருநாள் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுவினர் முன்னிலை வகித்தனர். அலங்கரிக்கப்பட்ட மாவிளக்கு, முளைப்பாரியை பள்ளிக்கு எடுத்து வந்து, செங்கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து, புதுப்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்தனர். பெற்றோர் கும்மி நடனமாடினர்.

டி.இ.ஓ., அருள்ஜோதி, ஏ.இ.ஓ.,சிவகுமார், வள மைய பொறுப்பாளர் மீனாட்சி, வக்கீல் வெங்கசுப்பு, அருகேயுள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் தனலட்சுமி, ரவி, குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திவ்யா, முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

மாணவர், பெற்றோர், பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பூந்தளிர்களுக்கு புத்தாடை திட்டத்தில், பெற்றோரை இழந்த, ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பூபதி, கதிர்வேல், மணி, ரமேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

மனவளக்கலை மன்றம்



திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனியிலுள்ள மனவளக்கலை மன்றம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது. தங்கம் ரமேஷ் எழுதிய கோலத்தமிழ் என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது.

முன்னதாக விழாவில் தங்கம் ரமேஷ் சிந்து சமவெளி குறியீடுகளை கொண்டு வரையப்பட்ட கோலம் அனைவரையும் கவர்ந்தது. விழாவில், மனவளக்கலை மன்ற நிர்வாகிகள், அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement