சட்டசபையில் எதிரொலிக்காத தெரு நாய்கள் விவகாரம் விவசாயிகள் கடும் அதிருப்தி
திருப்பூர் : தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, வெளிநடப்பு செய்வது, கோஷம் எழுப்புவது உள்ளிட்ட ஆளுங்கட்சிக்கு எதிராக தங்களின் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை காட்டி வருகின்றன.
இந்த 'அரசியல்' ஒருபுறமிருக்க, விவசாயிகள், தொழிற்துறையினர் உள்ளிட்டோர், தங்கள் துறை சார்ந்து, துறை அமைச்சர்கள் மற்றும் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பேசுவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். 'சட்டசபை கூட்டத்தொடரில் இந்த விவகாரம் எதிரொலிக்கும்; தீர்வு கிடைக்கும்' என்ற நம்பிக்கையில் உள்ளனர்.தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, ஈரோடு அமைச்சர் முத்துசாமி மற்றும் திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
விவசாய நிலங்களை பாழ்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லலாம் என, தமிழக சட்ட சபையில் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், தெரு நாய்கள் பிரச்னை தொடர்பாக அறிவிப்பும் வராதது ஏமாற்றமே.ஈஸ்வரன் மட்டுமே இதுகுறித்து பேசினர்.
திருப்பூர், ஈரோட்டில் 12 மாடுகள், 221 ஆடுகள் மற்றும் 354 கோழிகளை நாய்கள் கடித்துள்ளன என்ற புள்ளிவிபரம் கூட, சட்டசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது, வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைக்கு, அரசு தீர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.