வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
கோவையிலுள்ள வைணவக்கோவில்களில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
n ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், நேற்று காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, சுவாமிக்கு, 108 திரவியங்களில் திருவாராதனம், திருமஞ்சனம் அலங்காரமும், மூலவருக்கு ரத்னங்கியிலும், உற்சவருக்கு முத்தங்கியிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 5:30 மணிக்கு சீதா லட்சுமண, ஆஞ்சநேயர் சமேதராக சேஷவாகனத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசலை கடந்து, பக்தர்களுக்கு கோதண்டராமர் சேவை சாதித்தார்.
n பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை வேதவிற்பன்னர்களின் வேதபாராயணங்களை தொடர்ந்து சுவாமி, பக்தர்கள் சூழ பல்லக்கில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
n கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர், கரிவரதராஜபெருமாள், பேட்டை கல்யாணவெங்கட்ரமணசுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், கவுண்டம்பாளையம் சரவணாநகர் சபரிகார்டன் ஸ்ரீரங்கநாதர் வீரமாட்சியம்மன், கவுண்டம்பாளையம் சரவணாநகர் கோவை திருப்பதி, மருதமலை சாலை பி.என்.புதுார் கோதண்டராமர் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து, சுவாமியை தரிசித்தனர்.