திருச்செந்துாரில் தீவிரமாகும் கடல் அரிப்பு: ஐ.ஐ.டி., குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் குடுமிப்பிடி

5

துாத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், சமீபமாக கடல் திடீரென உள்வாங்குதல், அலையின் சீற்றம் அதிகரிப்பு, கடற்கரையில் மண் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால், பக்தர்கள் கடலில் புனித நீராடுவதில் சிரமம் இருந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மண் அரிப்பு காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இங்கு, 2022ல் ஆய்வு நடத்திய சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர், அமலிநகர், ஜீவாநகரில் ஒரே நேரத்தில் துாண்டில் வளைவு கட்டவும், கரை பாதுகாப்பு பணிகளை செய்யவும் பரிந்துரை செய்தனர்.

ஆனால், நிதி நிலையை கருத்தில் கொண்டு, அமலிநகரில் மட்டும் துாண்டில் வளைவு கட்ட, 58 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து பணி நடந்து வருகிறது.

நிதி இல்லை எனக்கூறி, ஜீவாநகரில் துாண்டில் வளைவு அமைக்க மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

இதற்கிடையே, திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 18 கோடி ரூபாய் மதிப்பில் ஐ.ஐ.டி., நிபுணர் குழுவினர் ஒரு திட்டத்தை பரிந்துரை செய்துள்ளனர்.

இதன்படி, திருச்செந்துார் கோவில் கடலில், 160 மீட்டர் நீளத்திற்கு தண்ணீருக்குள் அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்; 700 மீட்டர் நீளத்திற்கு மணல் பரப்பு கொண்டு செயற்கை கடற்கரையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரையை செயல்படுத்த, 18 கோடி ரூபாயை யார் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக, அறநிலையத் துறைக்கும், மீன்வளத் துறைக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.

அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

திருச்செந்துாரில் நிலவும் கடல் மண் அரிப்பு பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண அரசு முன்வர வேண்டும். கோவில் கடற்கரை பகுதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த பணிகளை மீன்வளத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செய்யும் போது, அவர்கள் துறையில் இருந்து நிதியை ஒதுக்கீடு செய்வதே நல்லது என, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இரண்டுமே தமிழக அரசின் துறைகள் தான். ஏதோ வேறு மாநில அரசு துறைகள் போல, அவசர கால பணிக்கு இப்படி குடுமிப்பிடி சண்டை போடுவது சரியல்ல.

மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த தொகுதியான திருச்செந்துாரிலேயே இந்த நிலை நீடிப்பதால், யாரிடம் போய் முறையிடுவது என, தெரியவில்லை.

யார் நிதி ஒதுக்கீடு செய்தாலும், ஐ.ஐ.டி., குழுவினரின் நேரடி கண்காணிப்பில் பணிகள் நடக்க வேண்டும். மீன்வளத் துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement