நாளை கோலாகலமாக துவங்குகிறது கும்பமேளா கொண்டாட்டம்: விரதம் இருந்து பங்கேற்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

8


புதுடில்லி: ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் பிரயாக்ராஜில் நாளை (ஜன.,13) முதல் நடக்க உள்ள மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், இந்தாண்டு மகா கும்பமேளா நாளை ஜன., 13ம் தேதி முதல் பிப்.,26ம் தேதியுடன் (மஹாசிவராத்திரி) முடிவடைகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால், கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மகா கும்பமேளா, தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற இருக்கிறது.


இதில், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. கும்பமேளா நடைப்பெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை ஹிந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.



இந்நிலையில், ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் லாரன் பாவெல் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார்.


நாளை கோலாகலமாக துவங்கும் கும்பமேளா நிகழ்ச்சியில் லாரன் பாவெல் பங்கேற்கிறார்.
அவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்; குறிப்பாக கல்பவாசம் மேற்கொள்ள உள்ளார். கல்பவாசம் என்பது, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விரதமாகும். இதை கடைப்பிடிப்பவர்கள், புனித கங்கையில் தினமும் நீராடி, விரதம் இருந்து வழிபாடு நடத்துவர்.


திரிவேணி சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் மட்டுமே தங்குவர்; ஆன்மிகம் தொடர்பான நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement