கோவில் பெண் ஊழியரை தாக்கிய காவலரிடம் விசாரணை
துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் நின்ற கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மாற்று வழியில் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த பெண் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, 38, அவரை தடுத்துள்ளார். தன்னை போலீஸ் என, அறிமுகம் செய்து கொண்ட அந்த பக்தர், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விஜயலட்சுமியின் கையை தட்டிவிட்ட அவர், கையை முறுக்கி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள், விஜயலட்சுமியை மீட்டு கோவில் வாகனத்தில் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயலட்சுமியை தாக்கியதாக, கோவையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் கார்த்திக், 29, அவருடன் வந்த மற்றொரு காவலர் நாகராஜ் ஆகியோரிடம் கோவில் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.