வண்டிப்பெரியாறில் திடீர் தீ; 5 கடைகள் எரிந்து சேதம் - மின்கசிவு காரணமா
கூடலுார் : கேரளா வண்டிப்பெரியாறில் திடீர் தீப்பிடித்ததில் 5 கடைகள் எரிந்து பொருள்கள் சேதமடைந்தது.
கேரளா வண்டிப்பெரியாறு பஸ் ஸ்டாண்ட் அருகே வியாபார நிறுவனங்கள் அதிகம். பசுமலை சந்திப்பு அருகே கே.ஆர்.பில்டிங் உள்ளது. அங்கு ஸ்டேஷனரி உட்பட 5 கடைகள் உள்ளன. மேலும் கம்ப்யூட்டர் சென்டரும், டிரைவிங் ஸ்கூலும் உள்ளது. நேற்று அதிகாலை 2:30 மணிக்கு ஒரு கடையிலிருந்து திடீரென தீப்பிடிக்க துவங்கியுள்ளது. மரங்கள் அதிகம் வைத்து கட்டப்பட்ட பழைய கட்டடமாக இருந்தால் தீ வெகுவாக பரவியது. அதிகாலை நேரமாக இருந்ததால் உடனடியாக அணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. பீர்மேடு, கட்டப்பனை, காஞ்சிராப்பள்ளி பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் கடைகளில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து கருகின. தீ அடுத்த கட்டத்திற்கு பரவாமல் தடுப்பதற்கான முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டதால் கூடுதலான கடைகள் சேதம் அடைவது தடுக்கப்பட்டது.
மின் கசிவினால் தீப்பிடித்ததாகவும், அருள் எண்டர்பிரைசஸ் என்ற கடையிலிருந்து முதன்முதலாக தீ பிடித்தது எனவும் முதற்கட்ட தகவலாக கூறப்பட்டுள்ளது. வண்டிப்பெரியாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.