2030ம் ஆண்டுக்குள் இயற்கை விவசாயம்;  கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பேச்சு

1

திருச்சி: ''2030ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டு வர பிரதமர் முயற்சி செய்து வருகிறார்,'' என்று தமிழக கவர்னர் ரவி பேசினார்.


திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள எம்.ஐ.டி., வேளாண் தொழில் நுட்பக் கல்லுாரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழக கவர்னர் ரவி கலந்து கொண்டார்.


தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு, வானகம்- நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், எம்.ஐ.டி., வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரி இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், மனைவி லட்சுமியுடன் கலந்து கொண்ட கவர்னர் ரவி, புதுப்பானையில் பொங்கல் வைத்தார்.


தொடர்ந்து, பொங்கல் பூஜை வழிபாட்டில் பங்கேற்ற அவர், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இயற்கை வேளாண்மை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியை கவர்னர் ரவி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கல்லுாரி அரங்கத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் உழவர் மற்றும் தொழில் முனைவோர் 45 பேருக்கு சான்றிதழ் வழங்கினார். விழாவில், தமிழில் அனைவருக்கும் வணக்கம், பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்த அவர் பேசியதாவது:

நானும், என் மனைவியும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். விவசாயிகள், உலக மக்கள் அனைவருக்கும் உணவு கொடுப்பதற்காக பிறந்தவர்கள். உணவு அளிக்கும் விவசாயிகள் உயர் குலத்தை சார்ந்தவர்கள், என்பதற்கான குறிப்பு நாலடியாரில் உள்ளது.

ஆங்கிலேயர் உரம் போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததால் மண் மலட்டு தன்மையாக மாறியது. நம்மாழ்வார் சொல்லித் தான் இந்த உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது. மண் மலடாக மாறியதால் விவசாயத்தில் மகசூல் குறைந்தது. இதை மீட்டெடுக்க வேண்டுமென்றால், நம்மாழ்வார் கூறியது போல், வருங்காலத்தில் இயற்கை விவசாயதிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


2030ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டு வர வேண்டும், என பிரதமர் முயற்சி செய்து வருகிறார். மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு மாற அரசும், நாமும் சேர்ந்து செயல்பட வேண்டும்.


நவீன தொழில் நுட்பம் விவசாயத்தை அழிக்கும் வகையில் இருக்கக் கூடாது. பாரம்பரிய கலாசாரத்தை மறந்து விவசாய முறைகளை மேற்கொண்டதால் தான், விவசாயம் நலிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கலாசார தொன்மையை பின்பற்றி விவசாயம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

Advertisement