நாளை மூணாறு வருகிறார் ஹங்கேரி பிரதமர்
மூணாறு : ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் பிரதமராக, 2010ல் இருந்து பதவி வகிப்பவர் விக்டர் ஓர்பன், 61. இதற்கு முன், 1998 - 2002 வரையிலான கால கட்டத்திலும், இவர் பிரதமராக பதவி வகித்துள்ளார். இவரது ஆட்சி காலத்தில், ஹங்கேரியில் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக நடவடிக்கைகள் நசுக்கப்படுவதாகவும், சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள், உக்ரைனை தங்களுடன் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தன. ஆனால், விக்டர் ஓர்பன் மட்டுமே, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புடினுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும், இவர் மீது ஒரு கருத்து நிலவுகிறது. 'உக்ரைனால், ரஷ்யாவை ஒருபோதும் போர்க்களத்தில் வெல்ல முடியாது. பேச்சு நடத்தி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, அழுத்தம் திருத்தமாக இவர் கூறி வருகிறார்.
கடந்தாண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நடந்த போது, மாஸ்கோ சென்று புடினை சந்தித்து பேசினார். இதற்கு மற்ற ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இவர் தற்போது, நம் நாட்டின் கேரளாவில், குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தன் மனைவி, இரண்டு மகள்கள், ஐந்து அதிகாரிகள் கொண்ட குழுவுடன், ஜன., 3ல், விமானம் மூலம் நெடும்பசேரிக்கு வந்தார். கேரளாவில், ஆலப்புழா, குமரகம், அதிரப்பள்ளி, வாழச்சால், கொச்சி, தேக்கடி ஆகிய சுற்றுலா பகுதிகளை பார்வையிட்ட பின், நாளை மூணாறுக்கு வருகிறார்.
மூணாறு அருகே விரிபாறை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரண்டு நாட்கள் தங்குகிறார். மூணாறில் தேயிலை தொழிற்சாலை, தேயிலை அருங்காட்சியகம் உட்பட, முக்கிய சுற்றுலா பகுதிகளை பார்க்க உள்ளார்.
இடுக்கி எஸ்.பி., விஷ்ணு பிரதீப் மற்றும் நான்கு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தங்கும் விடுதி உட்பட, அவர் செல்லும் இடங்கள், பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இவருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைக்காகவே தற்போது கேரளா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை திட்டவட்டமாக மறுத்த ஓர்பன் கூறியதாவது: நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இங்கு வந்துள்ளேன். இது தனிப்பட்ட பயணம். சுற்றுலாவுக்காக இங்கு வரவில்லை.
இரண்டு விஷயங்களுக்காக இங்கு வந்துள்ளேன். ஒன்று பழைய விவகாரங்கள்; இன்னொன்று எதிர்கால திட்டங்கள். பயண ஆராய்ச்சியாளர் வாஸ்கோடகாமா பற்றி, சிறுவயதில் படித்துள்ளேன். சிறு வயதில் அவரைப் பற்றி நிறைய கட்டுரைகள் படித்து, ஈர்க்கப்பட்டு, அவரின் வாழ்வியல் முறையைப் பின்பற்றுகிறேன்.
உலகின் வாழ்விடங்களைக் கண்டறிவதில் சிறந்தவர் கொலம்பஸ்; அவரைப் போன்றவர் வாஸ்கோடகாமா. அவர் இங்கு தன் கடைசி நாளை செலவிட்டதாக அறிந்து கொச்சிக்கு சென்று வந்தேன்.
மற்ற நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் வரை, அமைதியான சூழல் நிலவும்; அதற்குப் பிறகு தான் நிறைய வேலை இருக்கிறது.
பழமையான கலாசாரம், ஆன்மிக பாரம்பரியம் ஆகியவற்றுக்கு, இந்தியா பிரசித்தி பெற்றது. சிறந்த சுற்றுலா தளமாகவும் உள்ளது. இங்குள்ள பழைமை வாய்ந்த கலாசாரங்கள், ஆன்மிக விஷயங்கள், சிறந்த படிப்பு மற்றும் அறிவியல் ரீதியான விவகாரங்கள் குறித்து, ஹங்கேரி மக்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.
வெளிநாட்டு பிரதமர் ஒருவர், மூணாறுக்கு வருவது இதுவே முதல்முறை என்றாலும், ஓர்பன், 2013ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, தன் நாட்டின் 100 அதிகாரிகளுடன், இந்தியா வந்திருந்தார்.
கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும் இவர், அதன் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.