தேனி நகராட்சியில் குடிநீர் கட்டண வசூலில் குளறுபடி இணைப்பு இல்லாதவர்களுக்கும் நோட்டீஸ்
தேனி : தேனி அல்லிநகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்காமலே கட்டணம் செலுத்த கூறி நோட்டீஸ் வழங்கி குளறுபடி தொடர்கிறது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகர் பகுதிக்கு வைகை அணை, பழனிசெட்டிபட்டி முல்லைப்பெரியாறு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நகராட்சி பகுதியில் 15 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2832 வசூலிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். குடிநீர் கட்டணம் ரூ.9 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது.
இணைப்பு இல்லாதவர்களுக்கு நோட்டீஸ்
ஆனால் நகரில் பலருக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் கட்டணம் செலுத்துமாறு கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இணைப்பு வழங்காமல், இணைப்பு எண் மட்டும் பதிவிட்டு பல ஆயிரம் கட்டணம் செலுத்த கோரி நோட்டீஸ் வழங்குவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடிநீர் இணைப்பு இல்லாத வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கு இணைப்பே இல்லை. நகராட்சி வழங்கிய நோட்டீஸ்யை ரத்து செய்திட பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தாலும் ஒவ்வொரு ஆண்டும் டிமாண்ட் நோட்டீஸ் வழங்குகின்றனர்.
பொதுமக்கள் குறைதீர் மனுவை முறையாக பரிசீலிக்காமல் கிடப்பில் போடுவதை நகராட்சி வாடிக்கையாக உள்ளது.