மீண்டும் வெனிசுலா அதிபரானார் நிகோலஸ்: அமெரிக்கா எதிர்ப்பு
கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த 2019 முதல் நிகோலஸ் மதுரோ அதிபராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த ஜூலையில் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் எட்மண்டோ கோன்சலஸ் களம்இறங்கினார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்த சூழலில், 53.67 சதவீத ஓட்டுகள் பெற்று மதுரோ வென்றார்.
ஆளுங்கட்சி விசுவாசிகளின் ஆதிக்கம் நிறைந்த அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில், ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களுக்கு பின், மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது. இது, எதிர்க்கட்சியினருக்கு சந்தேகத்தை எழுப்பியது. தேர்தல் கவுன்சில் முடிவை அவர்கள் ஏற்கவில்லை. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தேர்தல் முடிவை ஏற்க மறுத்தன. இந்த சூழலில், திட்டமிட்டபடி மூன்றாவது முறையாக வெனிசுலா நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ நேற்று பதவியேற்றார்.
இதற்கிடையே, வெனிசுலாவின் ஜனநாயகத்தை அழித்ததாக மதுரோ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, மதுரோவை பிடித்து தருவோருக்கு இந்திய மதிப்பில் 215 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது.