குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? வெளியான தகவல்
புதுடில்லி: இந்தாண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தோனேஷியா அதிபர் பிரபோவா சுபியாண்டோ பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை இந்தியா அழைப்பது வழக்கம். கடந்த 2024ம் ஆண்டு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்றார்.
இந்நிலையில், இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வரும் பிரபோவோ சுபியாண்டோவுடன் பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லும் வகையில் பிரபோவோ சுபியாண்டோ பயணம் திட்டமிடப்பட்டு இருந்தது. இதனை பாக்., ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. ஆனால், தற்போது இந்த பயணத்தை அவர் ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்
2024- பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
2023- எகிப்து அதிபர் அப்தெல் பதா எல் சிசி
2021-2022ம் ஆண்டுகளில் கோவிட் பரவல் காரணமாக யாரும் பங்கேற்கவில்லை
2020- பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனரோ
2019- தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமாபோசா
2018- ஆசியான் அமைப்பின் 10 நாட்டு தலைவர்கள்
2017- அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது ஜயித் அல் நஹ்யான்
2016- பிரான்ஸ் அதிபர் பிரான்கோயில் ஹோலாண்டே
2015- அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா
2014- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே
2013 - பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
மேலும் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி(2008), ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(1995), பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜான் மேஜர்(1993), ஈரான் முன்னாள் அதிபர் முகமது கடாமி(2003),பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாக்ஸ் சிராக்(1998),நேபாள மன்னர் பிரேந்தர் பிர் பிக்ரம் ஷா தேவ்(1999),இந்தோனேஷியா முன்னாள் அதிபர் சுசிலோ பம்பாங் யுத்யோனா(2011),மாலத்தீவு முன்னாள் அதிபர் மமுன் அதுல் கயூம்(1991) ஆகியோரும் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள்.