ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுவதில்லை; சீமான் குற்றச்சாட்டு
சென்னை: 'யார் அதிகாரத்தில் இருந்தாலும் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுவதில்லை' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: உலகம் எங்கும் வாழும் எனது சொந்தங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். தமிழ் இன மக்கள் தமிழ் மொழியை மீட்டு, தங்களுடைய வரலாற்றை பாதுகாக்க வேண்டும். தனி மரம் தோப்பாகாது என்ற கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் தனித்தனி மரங்கள் இணைந்து தான் தோப்பு ஆகிறது என்ற கருத்தை நீங்கள் ஏற்க வேண்டும். தனித்தனி மரங்கள் எல்லாம் சேர்ந்து தான் தோப்பு ஆகிறது. மக்களுடன் இணைந்து நாங்கள் களத்தில் நிற்கிறோம்.
ஜனநாயக முறை
நாங்கள் தனித்த மரம் கிடையாது. நாங்கள் வழியை தேடுபவர்கள் அல்ல. வழியை உருவாக்குபவர். தை மகளே வருக. தமிழர் நலன் பெறுக. எங்களுக்கு வழி பிறக்கும். இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் கருத்தை நான் ஏற்கிறேன். யார் அதிகாரத்தில் இருந்தாலும் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுவதில்லை. நாங்கள் ஒரு போராட்டம் இயக்கம். வளரும் இயக்கம். களத்தில் நின்று தான் தீர வேண்டும். இதனால் நாங்கள் போட்டியிடுகிறோம்.
வேட்பாளர்
எதிர்க்கட்சி, அவ்வளவு வலிமை பெற்ற கட்சியே, பின்வாங்குகிறது என்றால், கொடுமையான ஜனநாயகம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தித்திக்கிற பொங்கல் திருநாளில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்பேன். உறுதியாக அறிவிப்போம். அம்பேத்கருடன், ஈ.வெ.ரா.,வை ஒப்பிடுவதை நிறுத்துங்கள்.
விவாதம் நடத்த தயார்
ஈ.வெ.ரா., குறித்து பொது வெளியில் விவாதம் நடத்த நான் இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன். பொங்கலன்று யு.ஜி.சி., தேர்வை நடத்தும் மத்திய அரசு வட இந்திய பண்டிகைகளின் போது தேர்வு நடத்துமா?. தமிழகத்தில் கேட்க ஆளில்லாததால் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது. தி.மு.க.வுக்கு வாக்கு செலுத்தி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.