ஜல்லிக்கட்டு களத்தில் கம்பீர குரல்: காளைகளுக்காக பேசும் செங்குட்டுவன்
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு விழாக்களில் காளைகளை அடக்க முயலும் வீரர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பை வர்ணனையாளரே ஏற்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் ராபூசலை சேர்ந்த சர்வதேச ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் பி.செங்குட்டுவன், 21 ஆண்டுகளாக வர்ணனை செய்து சாதனை படைத்து வருகிறார்.
அவர் கூறியது: சிறுவயதில் இருந்தே ஜல்லிக்கட்டு விழாக்களை பார்ப்பதில் ஆர்வம் அதிகம். எனக்கு இயற்கையாகவே நல்ல குரல்வளம் இருந்ததால், அப்போதிருந்தே 'மைக்கில்' உற்சாகமாக பேசி வந்தேன். அதுவே எனது நிரந்தர பணியாக மாறியது.
அலங்காநல்லுார், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தில் மட்டுமின்றி சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர் உட்பட தென் மாவட்ட ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டிலும் வர்ணனை செய்துள்ளேன்.
கடந்த ஆண்டு இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில்தொண்டமான் முதன் முறையாக அங்கு ஜல்லிக்கட்டு நடத்தினார். அங்கு சென்று வர்ணனை கொடுத்தது இலங்கை தமிழர்களிடையே வரவேற்பை தந்தது. மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த உள்ளனர். அங்கும் வர்ணனையாளராக செல்ல உள்ளேன். தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா துவங்கி முடியும் வரை நாள் ஒன்றுக்கு 9 முதல் 10 மணி நேரம் வரை, சுடுதண்ணீரை மட்டுமே அருந்தி வர்ணனை செய்துள்ளேன்.
கடந்த ஆண்டு விராலிமலையில் தொடர்ந்து 11 மணி நேரம் நடந்த ஜல்லிக்கட்டில் 1,400 காளைகள் குறித்து வர்ணனை செய்து 'யுனெஸ்கோ கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றேன். இலங்கையில் எனக்கு உலகளவில் சிறந்த வர்ணனையாளர் என்ற விருது கிடைத்தது. கடந்த 21 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு களத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்காக வர்ணனை செய்துள்ளேன். சென்னையில் நடந்த 2024 குடியரசு தின விழா ஜல்லிக்கட்டு அலங்கார ஊர்தியில் வர்ணனை செய்யும் பணியை செய்து, அரசிடம் சான்றும் பெற்றேன்.
ஜல்லிக்கட்டு களத்தில் 'திமில்' இல்லாத ஜெர்சி ரக காளைகளுக்கு தடை விதிக்குமாறு நான் தொடர்ந்து பேசிவந்ததின் விளைவாக அரசே, ஜெர்சி ரக காளைகளுக்கு தடை விதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இவரை பாராட்ட 99438 63300.