மண், உறவுகள், மொழியை மறக்காதீங்க: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: 'மொழியை மறக்காதீங்க. இந்த மண்ணையும், மக்களையும் மறக்காதீங்க. உங்கள் உறவுகளை மறக்காதீங்க' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ தேவி சிவனாந்தம், லட்சமி சோமசுந்தரம் உள்ளிட்ட அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் தாயகத்தில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் கொடுத்தனர். அயலகத் தமிழர்களால் பாலைவனம் சோலைவனமாகியது.
தொப்புள் கொடி
தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அமெரிக்காவிற்கு நான் சென்ற போது அயலகத் தமிழர்கள் காட்டிய பாசத்தை மறக்க முடியாது. எந்த தூரம் தமிழில் இருந்து நம்மை தூரப்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அயலகத் தமிழர்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ இந்த கருத்தரங்கு உதவும். வேர்களைத் தேடி திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர்.
ரூ.10 கோடி
இன்னலுக்கு உள்ளானவர்களின் புன்னகையை மீட்டுத் தந்திருக்கிறோம். என் ஆட்சியில் உருவான திட்டங்களில் வேர்களைத் தேடி திட்டம் மைல்கல்லாக உள்ளது. அயலகத் தமிழர்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். 100 ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கலைஞர்கள் அயலக நாட்டிற்கு சென்று பயிற்சி அளிப்பார்கள். இதற்கான செலவை அரசு ஏற்கும். இந்த திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழக அரசின் செயல்பாடுகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
மறக்காதீங்க...!
என்னுடைய ஸ்டைல் சொல் அல்ல, செயல். பூமியில் எங்கு வசித்தாலும் உங்கள் அடையாளத்தை விட வேண்டாம். உங்கள் வேர்களை மறக்காதீங்க. மொழியை மறக்காதீங்க. இந்த மண்ணையும், மக்களையும் மறக்காதீங்க. உங்கள் உறவுகளை மறக்காதீங்க. நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் சகோதரன் தமிழகத்தில் நான் இருக்கிறேன் என்பதை மறக்காதீங்க. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். வாழ்வதும், வளர்வதும் தமிழாகவும், தமிழர் இனமாகவும் இருக்கட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் பொங்கல் வாழ்த்து!
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயை போற்றிடுவோம்; மகிழ்ச்சி பெருவிழாவாக பொங்கலைக் கொண்டாடுவோம். தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான உரையைக் காழ்ப்புணர்வுடன் கவர்னர் படிக்காமல் வெளியேறினார்.
7வது முறை ஆட்சி
பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கிடும் வகையில் சட்டசபையில் சட்டத்திருத்த முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்பிட முனையும் அரசியல் எதிரிகளை எதிர்கொள்கிறேன்.
7 வது முறையாக தி.மு.க.வே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.