லாஸ் ஏஞ்சல்சில் தொடரும் காட்டுத்தீ: நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை

2


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடரும் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது. நிலைமை இன்னும் மோசமாகலாம் என எச்சரித்துள்ள வனத்துறை அதிகாரிகள், மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் கடுமையான காற்று ஆகியவை தீப்பிடிக்க காரணமாக கூறப்படுகிறது.

பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நான்கு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் வணிக கட்டடங்கள், 30 ஆயிரம் வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இதுவரை, 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்சில் நடிகர், நடிகையர் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன. இதேபோல், காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் ஈட்டன் மற்றும் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ இன்னும் சில பகுதிகளுக்கு பரவக்கூடும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 22,600 ஏக்கர் பகுதி எரிந்த நிலையில், 11 சதவீதம் மட்டுமே அணைக்கப்பட்டு உள்ளது. ஈட்டன் மற்றும் அல்டெண்டா பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் எரிந்தது. 15 சதவீதம் பகுதிகளில் மட்டுமே தீ அணைக்கப்பட்டு உள்ளது.

வரும் காலங்களில் பலத்த காற்றானது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாக அமையும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இந்த காட்டுத் தீ காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ காரணமாக கடும்புகைமூட்டமாக பல பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.

Advertisement