மூன்று மாதங்களாக போக்கு காட்டும் ஒற்றை சிறுத்தையால்'ஒரு ஊரே பீதி'

பனசங்கரி: மூன்று மாதங்களாக சிக்காமல் போக்குக்காட்டும் ஒற்றை சிறுத்தையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பெங்களூரு, பனசங்கரி ஆறாவது ஸ்டேஜ் அருகில், துாரஹள்ளி வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக, ஒரு சிறுத்தை, தன் குட்டியுடன் நடமாடி வருகிறது. இதனால் அப்பகுதியினர் பீதியில் உள்ளனர்.

இப்பகுதியில் உள்ள நாய், ஆடு என 10க்கும் மேற்பட்ட விலங்குகளை சிறுத்தை கொன்றுள்ளது. இதனால் அப்பகுதியினர், வெளியில் வருவதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். தங்கள் குழந்தைகளை விளையாடுவதற்கு கூட பெற்றோர் வெளியில் அனுப்பாத சூழல் நிலவுகிறது.

உணவு சப்ளை செய்யும் டெலிவரி பாய்ஸ்கள், ஊருக்குள் வருவதற்கு அச்சப்படுகின்றனர். வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் வாகனங்கள், சரியாக வராததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பி.எம்.டி.சி., டிரைவரை சிறுத்தை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியினர், தங்கள் உயிரை கையில் பிடித்து வாழ்வதாக கூறுகின்றனர். சிறுத்தையை பிடிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பனசங்கரி பகுதியை சேர்ந்த ஒருவர், துாரஹள்ளி வனப்பகுதி அருகே உள்ள பாறை மீது சிறுத்தை படுத்துக் கிடந்ததை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ, அப்பகுதி மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, மைசூரில் உள்ள இன்போசிஸ் வளாகத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து பீதியை கிளப்பியது. வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் தேடியும், சிறுத்தை சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement