எறும்பு தின்னியை வேட்டையாடி விற்க முயற்சி: 6 பேர் கைது
வேலூர்: அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான எறும்பு தின்னியை வேட்டையாடி விற்க முயன்ற 6 பேர் கைது செய்தனர்.
உலகில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை உயிரினங்களில் ஒன்றாக எறும்புத்தின்னி கருதப்படுகிறது. எறும்புண்ணி என்றும், அலங்கு என்றும் அழைக்கப்படும் இந்த விலங்கு, பாலூட்டி வகையை சேர்ந்தது.
இதை வேட்டையாடுவது, விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தமிழகத்தில், ஒரு கும்பல் இந்த விலங்கை வேட்டையாடி விற்பனை செய்வதாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலை கீழ்முருங்கை கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் உள்பட6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த எறும்புத்தின்னி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த விலங்கு மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
மருத்துவ பயன்பாடுகள் இருப்பதாக கூறி ஏமாற்றி எறும்புத்தின்னியை விற்பனை செய்கின்றனர். ஆனால் அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.