இந்திய ஓபன் பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து
புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையரில் சிந்து, இரட்டையரில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டில்லியில், இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் ஜனவரி 14ல் துவங்குகிறது. இதன் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகிறது. சமீபத்தில் முடிந்த மலேசிய பாட்மின்டனில் அரையிறுதி வரை சென்ற சாத்விக், சிராக் ஜோடி, சொந்த மண்ணில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன், 2022ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து களமிறங்குகிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த ஆண்டு சையது மோடி சர்வதேச தொடரில் கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ளார். இந்த வெற்றி தொடரும் பட்சத்தில், 2017க்கு பின் இந்திய ஓபனில் மீண்டும் சாம்பியன் ஆகலாம்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், பிரனாய் பங்கேற்கின்றனர். இத்தொடரில் 2022ல் சாம்பியன் பட்டம் வென்ற லக்சயா சென், கடந்த ஆண்டு சையது மோடி தொடரில் கோப்பை வென்றிருந்தார். மலேசிய ஓபனில் 2வது சுற்று வரை சென்ற பிரனாய் எழுச்சி கண்டால் தனது முதல் பட்டம் வெல்லலாம்.