ஆராய்ச்சிகள் முடிவதில்லை; சாகித்ய அகாடமி விருதாளர் வேங்கடாசலபதி பேட்டி!
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908 என்ற நுாலுக்காக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு கிடைத்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆராய்ச்சி நுாலுக்கு விருது கிடைத்திருப்பது எழுத்துலகத்தை சந்தோஷத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற வேங்கடாசலபதி திருநெல்வேலி மனோன்மணியம், சென்னை பல்கலை, சிகாகோ பல்கலையில் பேராசிரியராக பணிபுரிந்தவர். பாரிஸ், லண்டனில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயல் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார். திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908 நுால் எழுத என்ன காரணம், தமிழ் எழுத்துலகம் எப்படி இருக்கிறது என தினமலர் பொங்கல் மலருக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி:
சாகித்ய அகாடமி விருது எதிர்பார்த்தீர்களா?
முற்றிலும் எதிர்பாராத விருது. ஆராய்ச்சி நுாலுக்கு விருது கொடுத்து 40 ஆண்டுகளாகி விட்டது. கடைசியாக தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய பாரதி காலமும், கருத்தும் என்ற நுாலுக்கு 1983 ல் சாகித்ய அகாடமி விருது வழங்கினர்.
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908 நுால் எழுத என்ன காரணம்?
நாற்பதாண்டுகளாக சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் குறித்து ஆராய்ச்சி செய்கிறேன். சுதந்திர போராட்ட காலத்தில் அவர் கைது செய்யப்பட்ட போது திருநெல்வேலி, துாத்துக்குடியில் பெரிய எழுச்சி ஏற்பட்டது. ஆங்கிலேய ஆட்சியாளர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 4 பேர் கொல்லப்பட்டனர். நுாற்றுக்கணக்கானவர்கள் கைதாகினர். இது வரலாற்றில் பதிவாகவில்லை. அவர் குறித்து ஆராய்ச்சி செய்த போது இதை அறிந்தேன். அதை பற்றி விரிவாக எழுத நினைத்து இந்த நுாலை எழுதினேன்.
ஏற்கனவே இதுதொடர்பாக எழுதியிருந்தீர்களா?
1984ல் வ.உ.சிதம்பரனார் குறித்து ஆராய்ச்சி செய்த போதே இந்த தகவல்கள் எனக்கு தெரிய வந்தது. அதை வைத்து 1987ல் சிறிய நுாலாக எழுதினேன். பிறகு 2022ல் அந்த விவரங்களை எல்லாம் தொகுத்து விரிவாக எழுதியிருக்கிறேன்.
நுால் வெளியான போது வரவேற்பு எப்படியிருந்தது?
தேர்ந்த வாசகர்கள் இந்த நுாலை படித்தனர். இந்த நுால் வாசகர்கள் வரவேற்புக்காக எழுதப்பட்டது இல்லை. இலக்கிய பதிப்பு போல இருக்கிறது; முதலில் தெரியாத செய்தியை தெரிந்து கொள்ள முடிந்தது. நுால் படிக்க சுவையாக இலக்கிய நயத்துடன் இருப்பதாக படித்தவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் இந்த நுாலை படித்து விட்டு இப்படியொரு செய்தியை, ஒரு நிகழ்வு நடந்திருப்பதை திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த எனக்கே தெரியவில்லை என பாராட்டினார்.
பாரதியார், வ.உ.சி., புதுமைப்பித்தன் குறித்த ஆராய்ச்சியில் தாங்கள் ஆர்வம் காட்டியது ஏன்?
இவர்கள் குறித்து போதியளவு ஆராய்ச்சிகள் நடக்கவில்லை. இது என் கருத்து. மேலும் அவர்கள் மீது எனக்கு பெரியளவில் ஈடுபாடு உண்டு. பாரதியின் வீச்சு.. வ.உ.சி.,யின் தன்னலமற்ற தியாகம்... புதுமைப்பித்தனது மேதமை..., இவை அவர்கள் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும் 1908 நுாலுக்கு எவ்வளவு காலமானது?
38 ஆண்டுகளாகி விட்டது.
சமீபத்தில் தாங்கள் படித்த நுால்?
படித்ததில் பிடித்த நுால் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய பெருவழி என்ற நாவல். முகலாய மன்னர் ஷாஜகான் மகள் குறித்த அற்புதமான நாவல். அறியப்படாத செய்தியை கொண்டவை.
அற்புதமான நாவல். அறியப்படாத செய்தியை கொண்டவை.
எழுத்து, இலக்கியம் தாண்டி...?
வேறு எதுவும் கிடையாது. நண்பர்களுடன் அளவளாவுதல் மட்டுமே. ஆராய்ச்சி, படிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது.
அடுத்த நுால்?
வ.உ.சிதம்பரனாரின் சுதேசி இயக்கம் தொடர்பாக மற்றொரு நுால் தயாராகி வருகிறது.
இன்றைய இளைஞர்களிடம் இலக்கியம் குறித்து..
எங்கள் காலத்தை விட இன்றைய இளைஞர்கள் நிறைய படிக்கின்றனர். நாங்கள் சிறிய வயதில் படித்ததை விட அதிகம் படிக்கின்றனர். ஆனால் இன்னமும் அதிகம் படிக்க வேண்டும்.
எழுத்து உலகம் எப்படி போகிறது?
நிறைய புத்தகங்கள் வருகிறது. இன்னமும் அதிகமானோர் வாசிக்க வேண்டும்.
இவ்வாறு பேட்டியளித்தார்