புதிய இந்தியாவின் தலைமைத்துவம், பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம்: ஜெய்சங்கர் பெருமிதம்
மாட்ரிட்: 'புதிய இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது," என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஸ்பெயின் நாட்டிற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்நாட்டுக்கு அமைச்சராக ஜெய்சங்கர் செல்வது இதுதான் முதன்முறை.
அங்கு சென்ற அவர் ஸ்பெயின் வெளியுறவு துறை அமைச்சர் ஜோஸ் மானுவேல் அல்பாரெஸை சந்தித்துபேசினார். அதை தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.
இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்து அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்தியா- ஸ்பெயின் உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.
ஸ்பெயினின் உலகளாவிய தூதர்களிடம் உரையாற்ற ஒரு வெளிநாட்டு அரசு பிரதிநிதி அழைக்கப்பட்டது இதுவே முதல் முறை.
தங்கள் நாட்டின் தூதர்கள் மத்தியில் உரையாற்றும்படி ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அழைக்கும் போது, அது ஏன் என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.
இந்தியாவின் இன்றைய நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. இன்றைய உலகின் நிலைமையைப் பார்க்கும்போது, அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருப்பது தான் தங்கள் நலன் என்று நினைக்கின்றன.
நமது புதிய இந்தியா, அதன் பொருளாதார வலிமை மற்றும் தலைமைத்துவம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இன்று, நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம், மூன்றாவது பெரிய நாடாக இருக்கத் தயாராக இருக்கிறோம்.
நமது நிலைப்பாடு, திறன்கள் மற்றும் யோசனைகள் காரணமாக உலகம் நம்மை அறிந்திருக்கிறது. இந்தியா இன்று உலகளாவிய உரையாடல்களுக்கு பங்களிப்பதாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் பேசக்கூடிய நிலையில் மிகக் குறைவான நாடுகள் மட்டுமே உள்ளன; அதேபோலத்தான் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுடனும் உறவு உள்ளது. குவாட் மற்றும் பிரிக்ஸ் உறுப்பினர்களாகவும் இந்தியா உள்ளது.
பிரதமர் மோடியால் இரண்டையும் செய்ய முடிகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.