ஜோகோவிச், ஸ்வியாடெக் வெற்றி * ஆஸி., ஓபன் டென்னிசில் அபாரம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக் வெற்றி பெற்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் நிஷேஷ் மோதினர். இத்தொடரில் 10 கோப்பை வென்ற ஜோகோவிச், முதல் செட்டை 4-6 என இழந்தார்.
பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த இரு செட்டை 6-3, 6-4 என வசப்படுத்தினார். நான்காவது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
உலகின் 'நம்பர்-1' வீரர், இத்தாலியின் சின்னர், சிலியின் நிகோலசை எதிர்கொண்டார். இதில் சின்னர், 7-6, 7-6, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். ஸ்பெயினின் இளம் வீரர் அல்காரஸ், கஜகஸ்தானின் செவ்சென்கோவை 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் மிச்செல்சன் (அமெரிக்கா), தாம்ப்சன், டக்வொர்த், கோக்கிநாகிஸ் (ஆஸி.,) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
ஸ்வியாடெக் வெற்றி
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், 'நம்பர்-2' வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் சினியகோவா மோதினர். முதல் செட்டை 6-3 என வென்ற ஸ்வியாடெக், அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றினார். முடிவில் ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் லாட்வியானின் ஆஸ்டபென்கோ, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். இதில் பென்சிக் 6-3, 7-6 என வெற்றி பெற்றார்.
பிற போட்டிகளில் ஸ்விட்டோலினா (உக்ரைன்), பவ்லிசென்கோவா, சம்சனோவா (ரஷ்யா), முசோவா (செக் குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஒசாகா (ஜப்பான்) வெற்றி பெற்றனர்.