துவக்கம் தருவாரா ஜெய்ஸ்வால் * கவாஸ்கர் எதிர்பார்ப்பு

மும்பை: ''சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்க வேண்டும்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்,
இந்திய அணி இளம் வீரர் ஜெய்ஸ்வால் 23. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், 5 டெஸ்டில் இவர், 391 ரன் குவித்தார். அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் முதலிடம் பிடித்தார். கடந்த 'டி-20' உலக கோப்பை அணியில் இடம் பெற்ற போதும், களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
'லிஸ்ட் ஏ' அரங்கில் 32 போட்டியில் 1511 ரன் (சராசரி 53.96) எடுத்துள்ளார். இதனால் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இவரை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இவருக்கு சவால் தரும் மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில், 47 ஒருநாள் போட்டியில் 2328 ரன் (சராசரி 58.20) எடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' கவாஸ்கர் கூறியது:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மாவுடன் இணைந்து யார் துவக்கம் தருவர், தேர்வாளர்கள் யாரை தேர்வு செய்யப் போகின்றனர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரை, இடது கை பேட்டரான ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்கினால் நல்லது. ஏனெனில் வலது கை, இடது கை பேட்டர்கள் களத்தில் இருப்பது பவுலருக்கு சிரமம் தரும். இதனால் கூடுதல் ரன் வரலாம். 'மிடில் ஆர்டரில்' ரிஷாப் பன்ட் இருப்பதும் பலம். இதுபோன்ற விஷயங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement