ஆளும் கூட்டணியில் மோதல் சுயேட்சை எம்.எல்.ஏ., ராஜினாமா

திருவனந்தபுரம்,: கேரளாவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இருந்து விலகி, சமீபத்தில் திரிணமுல் காங்கிரசில் இணைந்த பி.வி.அன்வர், எம்.எல்.ஏ., பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, 2016 மற்றும் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன், மலப்புரம் மாவட்டத்தின் நிலம்பூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, பி.வி.அன்வர் இரு முறை எம்.எல்.ஏ., ஆனார்.

பல்வேறு விவகாரங்களில், அரசுக்கு எதிராக அவர் போர்க்கொடி துாக்கினார். இதையடுத்து, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி உடனான உறவை அவர் முறித்துக் கொண்டார்.

சமீபத்தில், நிலம்பூர் தொகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததற்கு எதிராக நடந்த போராட்டத்தில், வனத்துறை அலுவலகம் சூறையாடப்பட்டதாகக் கூறி, அன்வர் கைது செய்யப்பட்டார்.

மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்தும் வகையில், ஒரு கூட்டணியை அமைக்கப் போவதாகவும், இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப் போவதாகவும் அறிவித்தார்.

அன்வரின் இந்த அறிவிப்பு, பினராயி விஜயனுக்கும், தமிழக முதல்வருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த அன்வர், சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார். இவர் தற்போது, கேரளாவுக்கான திரிணமுல் காங்கிரசின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் , திருவனந்தபுரத்தில் சட்ட சபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் ஏ.என்.ஷம்ஷீரை சந்தித்து, நிலம்பூர் தொகுதியின் எம்,எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாகஅன்வர் தெரிவித்தார்.

Advertisement