அண்டை நாடுகளுக்கு உதவி செய்வதில் முதல் இடத்தில் இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்யும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐ.எம்.டி.,) 150வது நிறுவன தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது;
இந்த 150 ஆண்டுகளில், ஐ.எம்.டி., கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் அறிவியல் பயணத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. இன்று, இந்த சாதனைகள் குறித்து ஒரு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியில்லாத விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது .
நிலநடுக்கங்களுக்கான எச்சரிக்கை மையங்களை உருவாக்க வேண்டும். விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த திசையில் செயல்பட வேண்டும். எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்யும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
எந்தவொரு நாட்டில் ஏற்படும் பேரிடர்களுக்கு வானிலை ஆய்வு மிக முக்கியமான ஆதரவை வழங்குகிறது. இயற்கை பேரழிவுகளின் தாக்கத்தை குறைக்க, வானிலை ஆய்வின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், உலக வானிலை துறையின் பொதுச்செயலாளர் செலஸ்டி சாலோ, புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், புவி அறிவியல் செயலாளர் எம்.ரவிச்சந்திரன், ஐஎம்டி இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மற்றும் ஏராளமான உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.