போரில் அடைந்த வெற்றியை பயன்படுத்த தவறியது காங்கிரஸ் அரசு: ராஜ்நாத் சிங்

8

அக்னுார்: ''பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீரை மீட்காமல், ஜம்மு காஷ்மீர் என்பது முழுமை பெறாது,'' என்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.


@மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னுாரில் இன்று ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டார்.
வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:


ஜம்மு காஷ்மீர் என்பது, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியும் சேர்ந்தது தான். அந்த பகுதி இல்லாமல், ஜம்மு காஷ்மீர் முழுமை பெறாது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் நிலப்பரப்பு, பயங்கரவாதச் செயல்களை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாம்கள் அங்கு நடத்தப்படுகின்றன. அந்த முகாம்களை பாகிஸ்தான் அழித்தே தீர வேண்டியிருக்கும்.


இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையிலான போர், 1965ம் ஆண்டு அக்னுாரில் மிக உக்கிரமாக நடந்தது. இதில், இந்தியப்படையினர், பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர்.


சரித்திரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து போர்களிலும் இந்தியா வெற்றியே பெற்றுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி, நமது இஸ்லாமிய சகோதாரர்கள் பலர் உயிர் துறந்துள்ளனர்.


இப்போதும் கூட, இந்தியாவுக்குள் வரும் பயங்கரவாதிகளில் 80 சதவீதம் பேர் பாகிஸ்தானில் இருந்தே வருகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாதம், 1965ம் ஆண்டு போருடன் முடிவுக்கு வந்திருக்கும்; ஆனால், அந்த போரில் அடைந்த வெற்றியை, அப்போதைய காங்கிரஸ் அரசு ராஜதந்திர ரீதியில் பயன்படுத்த தவறி விட்டது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement