காயங்களுடன் வாலிபர் உடல் பகிங்ஹாம் கால்வாயில் மீட்பு
நீலாங்கரை, பகிங்ஹாம் கால்வாயில் நீலாங்கரை பகுதியில், நேற்று முன்தினம் மதியம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் மிதந்து கொண்டிருந்தது. குப்பை கழிவு மற்றும் புதர் அடர்ந்த பகுதியில் நின்றது. இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் உடலை மீட்க கம்பால் தள்ளி விட்டபோது, உடல் நீரில் அடித்து செல்லப்பட்டது. கே.கே., சாலை பாலம் வரை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். உடல், பாலத்தை கடந்து சென்றது. பாலத்துடன், சென்னை போலீஸ் கமிஷனரக நீலாங்கரை காவல் நிலை எல்லை முடிகிறது. அதன்பின், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கானாத்துார் காவல் நிலைய எல்லை துவங்குகிறது.
இதனால், நீலாங்கரை போலீசார் உடலை மீட்காமல், கானத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக, ஐந்து மணி நேரத்திற்கு பின், கானத்துார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். உடலில் பல இடங்களில் காயத்துடன், அழுகிய நிலையில் இருந்தது. கொலையாக இருக்கலாம் என தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பின் முழு விபரம் தெரிய வரும் என, போலீசார் கூறினர்.