சமூக சேவை, சூழல் பாதுகாப்பு கவர்னர் விருதுகள் அறிவிப்பு

சென்னை: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள், நிறுவனங்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், 'கவர்னர் விருது 2024' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ், கவர்னர் விருது - 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னலமற்ற சேவையை அங்கீகரித்து பாராட்டும் வகையில், விருது கொடுக்கப்படுகிறது.

இவ்விருதுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், தேர்வு குழுவினர் ஆய்வு செய்து, அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, 'சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பிரிவில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி, சமூக சேவை பிரிவில் நிறுவனங்கள் சார்பில், கோவை இதயங்கள், சென்னை 'ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்' ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தனிநபர் சார்பில், சென்னை எஸ்.ராமலிங்கம், கோவை ஜே.சொர்ணலதா, மதுரை ஏ.ராஜ்குமார் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில், நிறுவனங்கள் சார்பில், 'சென்னை சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு அறக்கட்டளை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விருது பெறும் நிறுவனங்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

தனிநபர் பிரிவில், தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கான விருதை, வரும் 26ம் தேதி குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ரவி வழங்க உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement