தேர்தல் நடத்தை விதிகள் மீறல்; டில்லி முதல்வர் மீது பாய்ந்தது வழக்கு: அதிஷி கடும் விமர்சனம்
புதுடில்லி: டில்லியில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, முதல்வர் அதிஷி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வரும் பிப்.5ம் தேதி டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் கீழ், முதல்வர் அதிஷி உட்பட இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கல்காஜி தொகுதியில் போட்டியிட அதிஷி இன்று வேட்டுமான தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: டில்லி போலீஸாருக்கு யார் பக்கபலமாக இருக்கிறார்கள். சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடக்குமா?
கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது தொகுதி மக்களுக்கு அயராது உழைத்துள்ளேன். கல்காஜி மக்கள் எனது குடும்பம், அவர்கள் என்னை அவர்களின் மகளாகவும் தங்கையாகவும் பார்க்கிறார்கள்.
நான் மட்டும் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடக்கிறது.
முதல்வர் அதிஷி மீது போடப்பட்ட உள்ள வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: எங்கள் கட்சி அனைத்து விசாரணை அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறது. அவர்களின் தலைவர்கள் வெளிப்படையாக பணம், சேலைகள், போர்வைகள், தங்கச் சங்கிலிகள் போன்றவற்றை விநியோகிக்கிறார்கள், போலி ஓட்டுக்களை பெறுகிறார்கள்.
இன்னும் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால் முதல்வர் அதிஷி மீது உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டி உள்ளார்.