சிருங்கேரி ஜகத்குரு 16ல் விஜய யாத்திரை; 24ல் மஹா கும்பமேளாவில் பங்கேற்கிறார்
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், 16ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை வட இந்தியாவில் விஜய யாத்திரை செய்ய உள்ளார்.
சிருங்கேரியிலிருந்து 16ம் தேதி புறப்படும் சுவாமிகள், பெங்களூர், பெல்லாரி, ஹோஸ்பேட் வழியாக 24ம் தேதி பிரயாக்ராஜ் சென்றடைந்து, மஹா கும்பமேளாவில் பங்கு கொள்கிறார்.
ஆதி சங்கரர், தெற்கில் சிருங்கேரியில் சாரதா பீடம், மேற்கில் துவாரகையில் துவாரகா பீடம், வடக்கில் பதரியில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் புரியில் கோவர்தன பீடம் என நான்கு ஆம்னாய பீடங்களை நிறுவினார். இம்மடங்களின் பீடாதிபதிகளாக உள்ள நான்கு சங்கராசார்ய சுவாமிகளின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் கலந்து கொள்கிறார்.
தவிர, சிருங்கேரி மடம் சார்பில் நடக்க உள்ள சாஸ்த்ர சம்மேளனம், வேத சம்மேளனம் ஆகியவற்றையும் பிரயாக்ராஜ் சிருங்கேரி மட கிளையில், ஸ்ரீ சாரதாம்பாள், கணபதி, ஆதிசங்கரர் எழுந்தருளி இருக்கும் கோவிலின் கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைக்கிறார்.
அங்கிருந்து 31ம் தேதி வாரணாசி சென்றடைகிறார்.
காசியில் அன்னபூர்ணா கோவிலின் கும்பாபிஷேகம், கோடி குங்குமார்ச்சனை, சஹஸ்ர சண்டி ஹோமம், மஹா ருத்ர ஹோமம், சாஸ்த்ர சம்மேளனம், வேத சம்மேளனம் ஆகியவை ஸ்ரீ மடம் சார்பாக நடைபெற உள்ளன.
பிப்., 9ல் அயோத்தி செல்லும் சுவாமிகள் 11ம் தேதி வரை அயோத்தியில் தங்கி ஸ்ரீ ராமர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், 11ம் தேதி கோரக்பூர் சென்றடைந்து பின் பிப்., 13ல் சிருங்கேரி வந்தடைகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை சிருங்கேரி மடத்தின் தலைமை அதிகாரி பி.ஏ.முரளி செய்து வருகிறார்.
----நமது நிருபர்-