ராகுலை பற்றி பேசினால் பா.ஜ.,வுக்கு கோபம் ஏன்?

9

புதுடில்லி,: ''காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலைப் பற்றி நான் பேசினால், பா.ஜ., உடனடியாக அதற்கு பதில் அளிக்கிறது. டில்லி சட்டசபைக்கான தேர்தல், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய உறவை வெளிப்படுத்தும்,'' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ல் தேர்தல் நடக்க உள்ளது.


இங்கு ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி உள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.


'ஊழலை ஒழிப்போம் என்றார். ஆனால், அதை அவர் செய்யவில்லை. டில்லியில் அவரால் நடமாட முடியவில்லை.

அதற்கு காரணம் டில்லியில் உள்ள காற்று மாசு. டில்லியில் காற்று மாசு, ஊழல், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது' என, ராகுல் குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில், 'ராகுல் என்னை கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. அவர் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற நினைக்கிறார். நான் நாட்டை காப்பாற்ற நினைக்கிறேன்' என, அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


இதற்கு, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாள்வியா, 'நாட்டை காப்பாற்றுவது இருக்கட்டும். முதலில் உங்களுடைய புதுடில்லி தொகுதியை காப்பாற்றி கொள்ள முடியுமா என்று பாருங்கள்'' என, பதிவிட்டிருந்தார்.

இதற்கு, ''நான் ராகுல் பற்றி ஒரு வரியில் கூறியிருந்தேன். அதற்கு பா.ஜ., ஏன் பதிலளிக்கிறது. இந்த இருக் கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய உறவை, டில்லி சட்டசபை தேர்தல் வெளிப்படுத்தி வருகிறது,'' என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



தங்கச் சங்கிலியும், மதுபானமும்!

டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே சமூக வலைதளங்களில் பெரும் வார்த்தை போர் நடந்து வருகிறது.டில்லி முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:டில்லி சட்டசபை தேர்தலில் மக்களுக்கு தங்கச் சங்கிலி வழங்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கட்சித் தலைமை அனுப்பிய தங்கச் சங்கிலிகளை, டில்லி தலைவர்கள் பதுங்கிவிட்டனர். அது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களுக்கு மட்டும் தங்கச் சங்கிலியை வழங்குகின்றனர். டில்லி மக்கள் இந்த தங்கச் சங்கிலியை வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், அதற்காக உங்களுடைய ஓட்டுக்களை விற்று விடாதீர்கள்; அது விலை மதிப்பில்லாதது. உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் உங்களுடைய ஓட்டுகளே தீர்மானிக்க உள்ளது. அதனால் பணம், தங்கச் சங்கிலி அளிப்பவர்களுக்கு ஓட்டளிக்காதீர்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்து பா.ஜ.,வின் லோக்சபா எம்.பி.,யான மனோஜ் திவாரி வெளியிட்டுள்ள பதிவு:டில்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்துஅவமானப்படுத்தி வருகிறார். அவர் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார். அதனால்தான், டில்லி மக்களுக்கு எதிராக இவ்வாறு கருத்து கூறியுள்ளார். வேறு வேலை இல்லாததால், அவர் இந்த வேலையை செய்து வருகிறார். டில்லி மக்களை ஏமாற்றி, அவர்களை மதுபான வியாபாரிகளுக்கு கெஜ்ரிவால் விற்றுவிட்டார். டில்லி மக்களை அடமானம் வைத்து, அவர் மதுபான கொள்கையில் ஊழல் செய்துள்ளார். ஓட்டுகளை விற்காதீர்கள் என்று அவர் அறிவுரை கூறுவது வேடிக்கை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement