'இஸ்ரோ' தலைவராக நாராயணன் பொறுப்பேற்பு
பெங்களூரு: 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் புதிய தலைவராக, டாக்டர் வி.நாராயணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இஸ்ரோ தலைவராக இருந்த சோம்நாத்தின் பதவிக்காலம், ஜன., 13ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக, தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த டாக்டர் வி.நாராயணனை நியமித்து, சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையான நேற்று, இஸ்ரோவின் புதிய தலைவராக, டாக்டர் வி.நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முன்னாள் தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார்.
கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட டாக்டர் வி.நாராயணன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.பி.எஸ்.சி., எனப்படும், திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குனராக பணியாற்றி உள்ளார். கரக்பூர் ஐ.ஐ.டி.,-யில் பட்டம் பெற்ற இவர், 1984-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.
இந்திய விண்வெளி துறையில், 40 ஆண்டுகள் அனுபவமுள்ள வி.நாராயணன், ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர். துவக்க காலத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றினார்.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி - 57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல் - 1 திட்டம், ஜி.எஸ்.எல்.வி., மாக் - -3 வகை ஏவுகணைக்கான, 'சி.இ., 20 கிரையோஜெனிக்' இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான் - 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்களில், டாக்டர் வி.நாராயணன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்.