விலை மதிப்பில்லா புன்னகையுடன் பொங்கல் கொண்டாடிய மாளவிகா: பாராட்டி மகிழ்ந்த முதல்வர்

9

சென்னை: தமிழக அரசின் பொங்கல் சேலையை அணிந்து, பொங்கல் கொண்டாடிய, மாளவிகா ஐயரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

கும்பகோணத்தை சேர்ந்தவர் மாளவிகா ஐயர். இவருக்கு வயது 35. இவரது தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் இன்ஜினியராக இருந்தவர். ராஜஸ்தானில் உள்ள பீகானிர் நகரில் குடும்பத்துடன் இவர் வசித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு மாளவிகா ஐயர் தனது 13 வயதில், விளையாடும்போது குப்பையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து தனது 2 கைகளையும் இழந்தவர். இவர் தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.



பொங்கல் பண்டிகையை ஒட்டி, சமூக வலைதளத்தில் தமிழக அரசு வழங்கிய விலையில்லா சேலையை அணிந்து, புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த பதிவில் அவர் கூறியதாவது: தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா!


பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும், உடலில் உற்சாகத்தையும் கொண்டுவரட்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


இந்தப் பதிவை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின், 'பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்' என பாராட்டி இருந்தார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement