'எங்களுக்கு நஷ்டமில்லை.. கவர்னருக்கு லாபமில்லை!'
திருவண்ணாமலை; ''முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல, ஆட்சியோடு தமிழக கவர்னர் சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அதனால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை; கவர்னருக்கு லாபமுமில்லை,'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வேலுார் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில், அமைச்சர் துரைமுருகன், தொண்டர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக கவர்னர், அவருக்கு உரிய மாண்பையும், மரியாதையையும் இழந்துவிட்டு முச்சந்தியில் நின்று சண்டை போடுவதை போல, ஆட்சியோடு சண்டை போட்டு கொண்டிருக்கிறார். அதனால், எங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை; கவர்னருக்கு லாபமுமில்லை.
எனவே, ஒரு அரசியல்வாதி போல பேசுவதை, கவர்னர் குறைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல் குவாரி புதியதாக திறக்க வாய்ப்பில்லை; எல்லா ஆறுகளிலும் நீர் ஓடுகிறது.
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கூறிய அண்ணாமலையின் நல் எண்ணத்துக்கு நன்றி. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.