வெளிநாட்டு வரி வசூலிப்புக்கு புதிய துறை; அறிவித்தார் டிரம்ப்

4


வாஷிங்டன்: வெளிநாட்டினரிடம் இருந்து வரி வசூலிப்பதற்கு புதிய துறை தொடங்கப்படும் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளை எல்லாம் டிரம்ப் நியமனம் செய்து முடித்துவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கூறி இருப்பதாவது:


மிக நீண்ட காலமாக, உள்நாட்டு வருவாய், வரி வசூல் சேவையை மட்டுமே நம்பியுள்ளோம்.
இந்த சூழல் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெளி நாட்டு வருவாய் சேவையை உருவாக்குவேன் என்று இன்று அறிவிக்கிறேன்.


அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கத் தொடங்குவோம். இதற்கு புதிய துறை ஒன்றை உருவாக்க இருக்கிறோம். வரும் ஜனவரி 20ம் தேதி அன்று, வெளிநாட்டு வருவாய் சேவை செயல்பாட்டுக்கு வரும். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement