ஹோண்டா மின்சார கார்: முதல் பார்வை
'ஹோண்டா கார்ஸ்' நிறுவனம், 'சீரிஸ் ஜீரோ' அணிவகுப்பில், முதல் இரு மின்சார முன்மாதிரி கார்களை உலக அளவில் காட்சிப்படுத்தி உள்ளது. அதில், ஒன்று எஸ்.யு.வி., மற்றொன்று 'செடான்' கார் ஆகும். முதலில் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்திய பின், இதர சந்தைகளில் வர உள்ளது.
சீரிஸ் ஜீரோ அணிவகுப்பில், மொத்தம் 7 மின்சார கார்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
காட்சிப்படுத்தப்பட்ட இரு கார்களும், 'ஸ்பேஸ் ஹப்' என்ற ஹோண்டாவின் மின்சார கார் முன்மாதிரி தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது, உட்புற இட வசதியை அதிகரிக்க, இதன் பேட்டரி மிக மெலிதானதாகவும், காரின் டிசைன் மினி வேனை போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார்களில், 'அடாஸ் 3' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, காரில் பயணிக்கும் போது, சில நேரங்களில் ஸ்டீயரிங் செய்ய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக, ஹோண்டா 'லெஜண்ட்' காரில், இந்த பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டது.
காரின் டிஜிட்டல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், ஹோண்டா உருவாக்கி உள்ள 'அசிமோ ஓ.எஸ்.,' என்ற மென்பொருள் அமைப்பின் வாயிலாக கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த இரு கார்களும், 'ரியர், ஆல் வீல் டிரைவ்' ஆகிய அமைப்புகளில் வருகின்றன. மற்றபடி, வேறு எந்த தகவல்களும் இல்லை.